இன்றைய அவசர உலகில், உடல் எடையை குறைப்பது என்பது ஒரு வர்த்தகமாகவே மாறிவிட்டது. “7 நாட்களில் 5 கிலோ உடல் எடையை குறைக்கலாம்.. பத்தியம் இல்லாமல் எடையை குறைக்கலாம்” என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன. டீடாக்ஸ் டீ (Detox tea), அதீத பட்டினி, கடினமான உடற்பயிற்சி சவால்கள் எனப் பலரும் குறுக்கு வழிகளை நாடுகின்றனர். ஆனால், இப்படி வேகமாக எடையை குறைக்கும் பலருக்கும், மீண்டும் அதே எடை மிக விரைவாக ஏறிவிடுகிறது. இது ஏன் நடக்கிறது? எடையைக் குறைக்க உண்மையில் எதுதான் சரியான வழி? இது குறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தரும் விளக்கங்களைப் பார்ப்போம்.
மருத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் சுகாதார ஆலோசகர் அனந்த் அகர்வால் இது குறித்துக் கூறும்போது, “எந்தப் பக்கவிளைவும் இல்லாமல் எடையைக் குறைக்க ‘தசை உருவாக்கம்’ (Muscle Building) மட்டுமே ஒரே வழி” என்கிறார். நாம் பொதுவாக எடை குறைய வேண்டும் என்று நினைக்கும்போது, உடலில் உள்ள கொழுப்பு குறைய வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.
ஆனால், பல நேரங்களில் நாம் செய்யும் தவறான டயட் முறைகளால் கொழுப்புக்குத் பதில் தசைகள் கரைந்து விடுகின்றன. தசை வளர்ச்சி என்பது ஒரு மெதுவான செயல்முறைதான். ஆனால், மெதுவாக நடக்கும் இந்த மாற்றம் மட்டுமே நிரந்தரமானது மற்றும் பாதுகாப்பானது. வலியும், அர்ப்பணிப்பும் இல்லாமல் உடல் எடையில் பெரிய மாற்றத்தை எதிர்பார்ப்பது இயலாத ஒன்று என அவர் எச்சரிக்கிறார்.
பிட்னஸ் ஆலோசகர் சாதனா சிங் இது குறித்து கூறும்போது, “வெறும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் குறையும் எடையில் பெரும்பகுதி நம் உடலின் தசை மற்றும் நீர்ச்சத்தே தவிர, கொழுப்பு அல்ல” என்கிறார். தசைகள் என்பவை நமது உடலின் இயந்திரங்கள் போன்றது. உங்கள் உடலில் எவ்வளவு தசை இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் ஓய்வெடுக்கும் போது கூட உங்கள் உடல் கலோரிகளை எரிக்கும்.
தசை இல்லாத நிலையில் உணவை மட்டும் குறைத்தால், உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற வேகம் (Metabolic rate) குறைந்துவிடும். இதனால் நீங்கள் மீண்டும் இயல்பாகச் சாப்பிடத் தொடங்கும்போது, எடை முன்பை விட மிக வேகமாக அதிகரிக்கும். இதனை ‘யோ-யோ’ (Yo-Yo) விளைவு என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.
புதிதாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் முதலில் செய்ய வேண்டியது, பட்டினி கிடப்பதை நிறுத்திவிட்டு புரதச் சத்துள்ள உணவுகளைச் சரியாக எடுத்துக்கொள்வதுதான். ஆரம்பத்திலேயே கடினமான எடைகளை தூக்காமல், மெதுவாகத் தனது உடல் எடையைப் பயன்படுத்தும் பயிற்சிகளை (Push-ups, Squats போன்ற பயிற்சிகள்) மேற்கொள்ளலாம்.
வாரத்திற்கு 2 முதல் 3 முறை முறையான உடற்பயிற்சி, தசைகள் மீண்டு வரத் தேவையான ஓய்வு மற்றும் ஆழமான உறக்கம் ஆகிய மூன்றும் மிக அவசியம். தசை வளர்ப்பு என்பது உங்களை ‘பாடி பில்டர்’ ஆக்குவது மட்டுமல்ல, அது உங்களை உட்புறமாக வலிமையாக்கி கொழுப்பை எரிக்க தயார்படுத்துவதாகும்.
தசை வளர்ச்சியின் மூலம் எடையை குறைக்கும்போது, முதல் 4 முதல் 6 வாரங்களுக்குத் தராசில் உங்கள் எடை குறையாமல் அப்படியே இருப்பது போல தோன்றலாம். அதற்குக் காரணம், உங்கள் உடலில் கொழுப்பு குறையும் அதே நேரத்தில் தசை வளர்ந்து எடையைச் சமன் செய்கிறது. ஆனால், உங்கள் உடலின் வடிவம் மாறுவதையும், துணிகள் லூஸாக இருப்பதையும், உங்களின் சுறுசுறுப்பு அதிகரிப்பதையும் நீங்கள் உணரலாம்.
கண்ணுக்குத் தெரிந்த மாற்றங்கள் தெரிய 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம். எனவே, தினமும் தராசில் ஏறி எடையை சரிபார்ப்பதைத் தவிர்த்துவிட்டு, உங்கள் உடலின் வலிமை மற்றும் ஆற்றல் அதிகரிப்பதை மட்டும் கவனியுங்கள். எடையைக் குறைப்பது என்பது ஒரு குறுகிய கால ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஆரோக்கியமான நீண்ட காலப் பயணம் என்பதைப் புரிந்துகொள்வதே நிரந்தர உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.



