மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்தில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தோல்வியடைந்த காரணத்தால், சமோசா வியாபாரி ஒருவர் பயணியை மிரட்டி, அவரது ஸ்மார்ட் வாட்சை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன..?
அக்டோபர் 17ஆம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் ஜபல்பூர் ரயில் நிலையத்தின் 5ஆம் நடைமேடையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சமோசா வாங்குவதற்காகப் பயணி ஒருவர், தனது ரயிலில் இருந்து கீழே இறங்கியுள்ளார். சமோசாவைப் பெற்ற பிறகு, ரயிலைப் பிடிப்பதற்காக அவர் அவசரமாகத் தனது மொபைல் செயலி மூலம் பணம் செலுத்த முயன்றுள்ளார்.
ஆனால், ‘போன்பே’ (PhonePe) செயலி வழியாக அவர் பணம் செலுத்த முயன்றபோது, ஏதோ காரணத்தால் அந்தப் பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளது. அப்போது அவரது ரயில் கிளம்பத் தொடங்கியதால், அவர் சமோசாக்களை அங்கேயே வைத்துவிட்டு, ரயிலைப் பிடிக்க ஓட முயன்றார்.
ஆனால், சமோசா வியாபாரி, அந்தப் பயணியின் சட்டைக் காலரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து, பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். ரயில் கிளம்பிவிட்ட பதட்டத்தில், வேறு வழியின்றி அந்தப் பயணி தனது கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சை கழற்றி வியாபாரியிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிக்கொண்ட வியாபாரி, இரண்டு பிளேட் சமோசாக்களை அவரிடம் கொடுத்து, ரயிலைப் பிடிக்க அனுமதித்துள்ளார். இந்தப் பரபரப்புக் காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வியாபாரிகளின் நடத்தை குறித்துக் கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஜபல்பூர் கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சம்பந்தப்பட்ட வியாபாரி அடையாளம் காணப்பட்டு, ரயில்வே பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த வியாபாரியின் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : தீபாவளிக்கு அதிரடியாக உயர்ந்த முட்டை விலை..!! கறிக்கோழி விலையும் டாப்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!



