ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தான் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியில் இணைய இருப்பதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான பெங்களூர் புகழேந்தி, மனோஜ் பாண்டியன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட சிலர் தி.மு.க.வில் இணைந்த நிலையில், வைத்திலிங்கமும் அதிமுக அல்லது தி.மு.க.வில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வந்தன.
இந்த சூழலில் தான், “உண்மையின் உரைகல்” என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தனியார் நாளிதழ், “மீண்டும் அதிமுகவில் இணைய பேச்சு; வைத்திலிங்கத்துக்கு பழனிசாமி பச்சைக்கொடி” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்திகள் மிகுந்த வருத்தமளிப்பதாக வைத்திலிங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நான், திமுகவில் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், பின்னர் அதிமுகவில் சேர விரும்புவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக, என்னிடமிருந்து மன்னிப்புக் கடிதம் பெற்று அதிமுகவில் சேர்க்கும் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி முன்னாள் அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாகவும் வெளியான செய்தியில் எள்ளளவும் உண்மை இல்லை. எனது அரசியல் நோக்கம், எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு ஜெயலலிதா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை மீட்டெடுத்து மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பதுதான்.”
மேலும், சில நாட்களுக்கு முன் தனக்கு மூளையில் அடைப்பு ஏற்பட்டுப் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், நலம் பெற்ற பிறகு அதிமுகவில் இணைவேன் என்றும் வெளியான செய்தியையும் வைத்திலிங்கம் மறுத்துள்ளார். “அந்தச் செய்தியும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. நான் எந்த மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படவில்லை என்பதையும், பூரண நலத்துடன் இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான, விஷமத்தனமான செய்திகளை வருங்காலங்களில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More : உண்மையிலேயே வயாகரா மாத்திரை எதற்கு தெரியுமா..? இதன் பக்கவிளைவுகள் தெரிந்தால் தொடவே மாட்டீங்க..!!



