எதிர்காலத்தை பற்றிய கணிப்புகள் எப்போதும் உலக நாடுகளை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் ஆழ்த்துவதுண்டு. அந்த வகையில், பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம் மற்றும் கோவிட்-19 பெருந்தொற்று ஆகியவற்றை முன்கூட்டியே சரியாக கணித்த பிரிட்டிஷ் தீர்க்கதரிசி கிரெய்க் ஹாமில்டன் பார்க்கர், தற்போது 2026-ஆம் ஆண்டிற்கான தனது திடுக்கிடும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.
‘அழிவின் தீர்க்கதரிசி’ என்று வர்ணிக்கப்படும் இவரது கணிப்புகள், அமெரிக்க அரசியல் தொடங்கி உலகப் பொருளாதாரம் வரை பல முக்கியத் துறைகளில் பாரிய மாற்றங்கள் நிகழப்போவதை உறுதிப்படுத்துகின்றன. ரெய்க் ஹாமில்டன் பார்க்கரின் முதல் கணிப்பு அமெரிக்க அரசியலை மையப்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டில் வெடிக்கப் போகும் ஒரு மிகப்பெரிய உலகளாவிய மோதல் அல்லது போர், அமெரிக்காவின் தேர்தல் நடைமுறைகளையே தலைகீழாக மாற்றும் என்று அவர் கூறுகிறார்.
இந்த அசாதாரண சூழலில் பயன்படுத்தப்படும் “அவசரகால அதிகாரங்கள்”, டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது முறையாக அதிபராக நீடிக்க வழிவகுக்கும் என்பது அவரது அதிரடி கணிப்பு. மேலும், ரஷ்யா – சீனா கூட்டணி அமெரிக்காவுக்கு எதிராக ஒரு புதிய போரை தூண்டும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
ஜப்பான் மற்றும் ஈரானுக்கு எச்சரிக்கை :
ஆசிய நாடுகளை பொறுத்தவரை, 2026 ஆகஸ்ட் மாதத்தில் ஜப்பானின் வடக்கு பகுதியில் ஒரு மர்மமான “விஷ வாயு மேகம்” தோன்றும் என கிரெய்க் கணித்துள்ளார். இது எரிமலை செயல்பாட்டை தூண்டுவதற்காக நடத்தப்படும் ஒரு ரகசிய தாக்குதலாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார். அதேபோல், மார்ச் 2026-ல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும், இது ஈரானின் அணுசக்தி கனவை தகர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இதன் முடிவில் ஈரானிய மக்களுக்கு ஒரு ஜனநாயக ரீதியான சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வழங்குகிறார்.
தொழில்நுட்ப துறையை பொறுத்தவரை, 2026இல் ஒரு சக்திவாய்ந்த ‘சைபர் தாக்குதல்’ உலகளாவிய நிதிச் சந்தைகளை சீர்குலைக்கும் என்று கிரெய்க் எச்சரித்துள்ளார். இந்தத் தாக்குதல் கிரிப்டோகரன்சிகள் மற்றும் வளர்ந்து வரும் AI (செயற்கை நுண்ணறிவு) சந்தையைக்கூட நிலைகுலைய செய்யும். எனவே, மக்கள் தங்களது டிஜிட்டல் தரவுகளை பாதுகாப்பாக பேக்கப் செய்துகொள்ள வேண்டும் என்றும், கிளவுட் சேமிப்புகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்துகிறார். இந்த காலக்கட்டத்தில் தங்கத்தின் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் நிலவும்.
இறுதியாக, தற்போதைய உலகளாவிய அமைப்புகளான நேட்டோ (NATO) பலவீனமடைய தொடங்கும் என்றும், வளங்களுக்காக நாடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் சூழல் உருவாகும் என்றும் கிரெய்க் கூறுகிறார். குறிப்பாக, கிரீன்லாந்தின் இயற்கை வளங்களை அமெரிக்கா கைப்பற்ற முயற்சிக்கும். 2030-ஆம் ஆண்டிற்குள் ஐக்கிய நாடுகள் சபைக்கு (UN) மாற்றாக ஒரு புதிய அமைதி காக்கும் அமைப்பு உருவாகும் என்றும் அவர் கணித்துள்ளார். மனிதகுலம் பல சவால்களைச் சந்திக்க வேண்டிய ஒரு காலக்கட்டமாக 2026 அமையும் என்பதே இவரது கணிப்புகளின் சாராம்சமாக உள்ளது.



