2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டசபைக்கான தேர்தலும் வரும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2024இல் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வர உள்ளது. அப்போது அதிமுக வெல்லும். ஆட்சி பொறுப்பேற்று 16 மாத காலமாக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கலைஞருக்கு நினைவு மண்டபம், நூலகம், எழுதாத பேனாவுக்கு கடலில் நினைவுச் சின்னம் அமைத்தது ஆகியவை தான் ஸ்டாலின் செய்த சாதனை. அவரது அப்பாவுக்காக பல திட்டங்களை செய்த ஸ்டாலின், மக்களுக்காக எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. திருமண உதவி திட்ட தொகையை உயர்த்துவோம் என சொல்லிய ஸ்டாலின், இன்று அந்த திட்டத்தையே மாற்றி விட்டார். முதியோர் உதவித் தொகை வழங்குவதில் அரசியல் பார்க்க கூடாது. சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால், சொத்து வரியை 100% உயர்த்தி உள்ளார்கள். இந்தியாவில் பல மாநிலங்கள் தமிழகத்தை விட குறைவான அளவில் மின் கட்டணத்தை வைத்துள்ளார்கள்.

ஓசியாக பேருந்தில் செல்வதாக மக்களை அமைச்சர் பொன்முடி கொச்சைப்படுத்துகிறார். இதுதான் திராவிட மாடல். அமைச்சர் மூர்த்தி பிரம்மாண்டமாக மகன் திருமணத்தை நடத்தினார். இதற்கு எங்கிருந்து பணம் வந்தது, கமிஷன்.. கலெக்ஷன்.. கரப்ஷன்.. 30 கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திருமணம் நடத்தி உள்ளார். 38 திட்டங்கள் அறிவித்து அதற்கு 38 குழுக்கள் அமைத்து உள்ளார். குழு அமைப்பதற்கு விருது அளிக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்கு தான் வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.