தகாத உறவினால் கர்ப்பமடைந்து குழந்தை பெற்ற கல்லூரிக்கு மாணவியை, அவரது தந்தையே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அருகே எலமனூரைச் சேர்ந்தவர் கலைவாணி. 19 வயதான இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்த நிலையில், தகாத உறவினால் கர்ப்பமடைந்தார். இந்நிலையில், முக்கொம்பு பகுதியில் பிரசவித்த குழந்தையை புதரில் வீசிச் சென்ற கல்லூரி மாணவி கலைவாணி, குழந்தையை வீசி சென்றது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கியதை அடுத்து, விஷம் குடித்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, கலைவாணியின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, திருச்சி குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றார்.

இந்நிலையில், மாணவி கலைவாணியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் தந்தை மற்றும் அத்தையைப் போலீசார் கைது செய்தனர். மாணவியின் தந்தை செல்வமணி உள்ளிட்ட குடும்பத்தாரிடம், போலீசார் விசாரித்தனர். மாஜிஸ்திரேட்டிடம் மாணவி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், மாணவியின் தந்தை செல்வமணி (47). அத்தை மல்லிகா (51) ஆகியோர் மாணவிக்கு கட்டாயமாக விஷம் கொடுத்து குடிக்க செய்துள்ளது தெரிய வந்துள்ளதால், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. மாணவிக்கு வலுக்கட்டாயமாக தந்தையே விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.