திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பு (வயது 32). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளி தான் அன்பு. இன்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் அங்குள்ள ஜிம்முக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார் அன்பு.
அப்போது, இரு வேறு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரைப் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அன்பு, உயிருக்குப் பயந்து ஓடினார். ஆனால், அவரை பின்தொடர்ந்து சென்ற கும்பல், அன்புவை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
பின்னர், உயிருக்குப் போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவல் அறிந்ததும் அன்புவின் மனைவி மற்றும் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.