பிளஸ்2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் குடியாத்தம் போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம் செருவங்கியை சேர்ந்தவர் பிரதீப் (22). இவர் அங்குள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவர் குடியாத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 12ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவியை அவரது பெற்றோர் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகளிடம் விசாரித்த போது, கர்ப்பத்துக்கு வெல்டிங் தொழிலாளி பிரதீப் தான் காரணம் என்பதும், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்தும் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.