அண்ணியுடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்த வடமாநில வாலிபர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – பாகலூர் செல்லும் சாலையில் உள்ள உலியாளம் கிராமத்தில் தனியார் லேஅவுட்டில் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பீகாரைச் சேர்ந்த சிவிஜிகுமார் (22), பங்காஜூ பஸ்வான் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவர்கள் இருவரையும் ஒப்பந்த பணியாளர்களாக தொளுவபெட்டாவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயக்குமார் (27) என்பவர் பணியமர்த்தி உள்ளார். சிவிஜிகுமார், பங்காஜூ பஸ்வான் ஆகிய இருவரும் உலியாளம் பகுதியில் ஒரே அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிகாலை 2.30 மணியளவில் சிவிஜிகுமார் திடீரென்று ஜெயக்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனது அறையில் இருந்த பங்காஜூ பஸ்வானை காணவில்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஜெயக்குமார் அங்குச் சென்றார். இருவரும் சேர்ந்து பங்காஜூ பஸ்வானை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். அப்போது, காணாமல் போனதாகச் சொல்லப்பட்ட பங்காஜூ பஸ்வான், அவர் தங்கியிருந்த அறையின் அருகே உள்ள முற்புதரில் சடலமாகக் கிடந்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், பங்காஜூ பஸ்வானை மர்ம நபர்கள் கழுத்தை நெரித்துக் கெலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சந்தேகத்தின்பேரில், அவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த சிவிஜிகுமாரை பிடித்து விசாரித்தபோது, அவர்தான் பங்காஜூவை கொலை செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகாரில் உள்ள சிவிஜிகுமாரின் அண்ணியுடன் பங்காஜூ பஸ்வானுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவிஜிகுமார் அவரை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சிவிஜிகுமார், கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஓசூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் கட்டட வேலை இருப்பதாகக்கூறி, அழைத்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (அக். 2) இரவு, ஓசூரில் வைத்து அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சிவிஜிகுமார், பங்காஜூ பஸ்வானின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, முட்புதருக்குள் சடலத்தை தூக்கி வீசிவிட்டுச் சென்றிருப்பதும், தான் கொலை செய்தது தெரியாமல் இருக்க, அவரும் ஜெயக்குமாருடன் சேர்ந்து பஸ்வானை தேடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சிவிஜிகுமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.