இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட தகராறில், ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆதனூர் மணல் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது வீட்டின் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் வசூல் செய்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக சக்திவேல் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக நிதி நிறுவன ஊழியரின் இருசக்கர வாகனம் மீது சக்திவேலின் வாகனம் மோதியுள்ளது.
அப்போது, ஆத்திரமடைந்த ஜோசப், சக்திவேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு, இருவருமே கடுமையாக வசைபாடிக் கொண்டனர். இதையடுத்து, அங்கிருந்த மக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், கோபம் குறையாத சக்திவேல், ஜோசப்பை பழிவாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி, சக்திவேல் மற்றும் அவரது உறவினர்கள் 4 பேர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜோசப்பை சரிமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைமந்த ஜோசப், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல், பாக்கியராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்த நிலையில், மேலும் இருவரை தேடி வருகின்றனர்.