கடலூர் மாவட்டம் ஆவினங்குடியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (45). இவர் ஆவினங்குடி காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சென்னை ஆலந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்த சித்ராதேவி (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வைத்தியநாதன் தனக்கு திருமணமானதை மறைத்து சித்ராதேவியை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில் சித்ராதேவிக்கு கடலூர் எஸ்பி அலுவலகத்தில் பணி மாற்றம் கிடைத்து அங்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது வைத்தியநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை அறிந்து இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது வைத்தியநாதன் சித்ராதேவியை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சித்ராதேவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வைத்தியநாதன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.