திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தேவநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் உமாராணி (42). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் இறந்து விட்டார். இதனால் உமாராணி கோவையில் தங்கி, அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு தனது குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். இதற்கிடையே, சிதம்பரத்தை சேர்ந்த பெயிண்டரான கணேசன் (30) என்பவருடன் உமாராணிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் உமாராணி, கணேசனை விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கே வந்துவிட்டார்.
இதனையறிந்த கணேசன், உமாராணியை பார்ப்பதற்காக தேவநாயக்கன்பட்டி வந்துள்ளார். அங்கு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த உமாராணியின் உறவினரான காளிதாஸ் என்பவர் அங்கு சென்றுள்ளார். அவர் கணேசனை அழைத்துச்சென்று பேருந்தில் ஏற்றி விட சென்றுள்ளார். காளிதாஸ் வேடசந்தூர் பேருந்து நிலையத்திற்கு கணேசனை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில் பூத்தாம்பட்டி அரசு மதுபான கடையில் மதுவாங்கி இருவரும் குடித்துள்ளனர். மது போதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் காளிதாஸ் தன்னை தாக்கியதாக உமாராணிக்கு போன் மூலம் கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வாடகை காரில் அங்கு வந்த உமாராணி, இருவருக்கும் இடையே சமாதானம் செய்துள்ளார். அப்போது கணேசன், தான் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து காரில் உட்கார்ந்திருந்த காளிதாசின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வேடசந்தூர் போலீசார், காளிதாஸின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணேசனை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.