தீபாவளி பண்டிகைக்கு அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்த சுங்கச் சாவடி ஊழியர் மீது நடவடிக்கை எடுத்ததால், பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் லப்பை குடிக்காடு அருகேயுள்ள சு. ஆடுதுறை கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பிரிவில் ரோந்து வாகனத்தில் உதவியாளராக கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையைக் குடும்பத்தினருடன் கொண்டாட, அன்றைய தினம் கோபால் விடுப்பு கேட்டும் நிர்வாகம் தர மறுத்துவிட்டதால் அவர் அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளார். தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய கோபாலிடம் மேற்பார்வை பணியிலிருந்த அலுவலர் செந்தில் குமார், ஒரு வார காலத்திற்கு கோபாலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக கூறி பணி வழங்க மறுத்துள்ளார்.

பணியிடை நீக்க காலமான ஒரு வாரம் முடிந்த நிலையில், நேற்று மீண்டும் பணிக்கு சென்ற கோபாலிடம், சுங்கச்சாவடி நிர்வாகம் கோபால் மீது விசாரணை நடத்த உள்ளதாக கூறி, நிர்வாகம் அனுமதித்தால் பணிக்கு வரலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கோபால் நேற்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் தற்கொலை செய்து கொண்ட கோபாலின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது மகன் தற்கொலைக்கு காரணமான நிர்வாக பிரிவில் பணிபுரிந்து வரும் மனோஜ், சிவசங்கர், கருணாகரன், ராஜ்கிரண், செந்தில்குமார் மற்றும் சபியுல்லா ஆகிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கோபாலின் தந்தை முருகேசன் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.