சேலம் மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஒன்பது பஞ்சாயத்துக்கள், 70 கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்கு, பெரும்பாலும் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது காஃபி தோட்டம். இந்த தோட்டத்தில் கூலி வேலை செய்பவர்களே அதிகம். இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர், அவர்களது குழந்தைகளை வசதியின்றி அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர்.
ஆனால், மலை கிராமங்களில் உள்ள சில பள்ளி கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, பட்டி பாடி கிராமத்தில் உள்ள பள்ளியின் நிலை மிகவும் மோசம். இங்குள்ள பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், மழைக்காலங்களில் பள்ளிக்குள் மழை நீர் புகும் அவலம் உள்ளது. மழைநீர் பள்ளிகளை சுற்றியும் தேங்குவதால், கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. அவ்வபோது, பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையும் பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சத்துடன் படித்து வருகின்றனர்.
மழை பெய்யும் போதெல்லாம், மாணவர்கள் வகுப்பறைக்குள் அமர்ந்து படிக்காமல், வராண்டாவில் பாடம் படிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், வராண்டாவில் உள்ள ஓடுகள் எப்போது வேண்டுமானாலும், மாணவர்கள் மீது விழும் அபாயம் உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், எந்த ஒரு அதிகாரிகளும் இதுவரை நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இதே நிலைமை நீடித்தால் தங்கள் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சம் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, மலை கிராமங்களில் சேதமடைந்து கிடக்கும் அரசுப் பள்ளிகளை உடனே சீரமைத்து, தங்கள் குழந்தைகளுக்கு அசம்பாவிதம் ஏதும் நிகழாமல், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளனர்.