திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). இவர், டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி இரவு வழக்கம்போல கடையை மூடிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் பரந்தாமன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெய்லர் ஆறுமுகத்திடம் கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் வரை கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்ததால் கூலிப்படை ஏவி அவரை கொலை செய்ததாகவும் டிரைவர் பரந்தாமன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கூலிப்படையாக செயல்பட்ட கார் டிரைவர் பாரதி (21), கல்லூரி மாணவர் தமிழரசன்(20), ஸ்ரீகாந்த் (20) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.