ஓபிஎஸ் உடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமரை தேர்வு செய்ய அணிலைப் போல் செயல்படுவோம். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் தான் உள்ளன. யாருடன் கூட்டணி என்பது அப்போது முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்றது. அதில், எடப்பாடி பழனிசாமி செய்த திருவிளையாடலால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய் வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்த திமுகவின் சாயமும் வெளுத்து வருகிறது. அமைச்சர்களின் ஆணவப் பேச்சு, ஸ்டாலின் குடும்பத்தின் ஆதிக்கம் அனைத்திற்கும் மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
ஓபிஎஸ் உடன் பேசி பல வருடங்கள் ஆகின்றன. அதேபோல் அதிமுகவினர் என்னோடு பேசுவதை அரசியலாக பார்க்க வேண்டாம். அரசியல் வேறு பழக்க வழக்கம் வேறு. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் நடக்குமா? என்ற கேள்விக்கு, என்ஐஏ சோதனை, இறையாண்மைக்கு எதிராக பேசுவது, ஆயுதங்களை கையகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பார்க்கும் போது தமிழகத்தில் 2024ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது” என்று பதிலளித்தார்.