காதலியை கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த நெரிகம் கிராமத்தில் வெங்கடசாமி (55) – நீலம்மா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லாவண்யா (26), பிரியங்கா (22) ஆகிய இரு மகள் உள்ளனர். இதில், மாற்றுத்திறனாளியான பிரியங்கா ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை பணிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியங்கா, அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆந்திராவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருந்த வெங்கடசாமியை போனில் தொடர்பு கொண்ட ஒருவர், உங்கள் மகளை கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால் விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளார். அதேபோல், பிரியங்காவின் தாய் நீலம்மாவையும் அந்த நபர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நீலம்மா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். பணம் கேட்டு மிரட்டியவர் முதுகுறுக்கியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (25) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. ஓட்டுநரான இவர், பிரியங்காவை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனால், அவரை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் ஸ்ரீகாந்தின் செல்போன் சிக்னலை வைத்து தேடியதில், அவர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் கர்நாடக போலீசார் உதவியுடன் நள்ளிரவு அவரை பிடித்து பேரிகை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீகாந்த், அவரை கொலை செய்து கும்பளம் அருகேயுள்ள ஆற்றுப் பாறையில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கு சென்று பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், பிரியங்காவை அவர் அணிந்திருந்த ஐ.டி. கார்டின் டேக்கால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.