பிராட்வேயில் என்ஐஏ அதிகாரிகள் எனக்கூறி பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிராட்வேயில் உள்ள மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜமால். இவர், பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் ஜமாலின் வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், நாங்கள் என்ஐஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு அப்தும் ஜமால் வீட்டில் சோதனை நடத்தி பல லட்சத்தை சுருட்டிச் சென்றனர். அதேபோல் கடையில் சோதனை நடத்திய அவர்கள் கடையில் இருந்த பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக முத்தையால் பேட்டை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், நேற்று இந்த கொள்ளையில் ஈடுபட்டதாக பாஜக வடசென்னை மாவட்ட நிர்வாகி வேலு, ரவி, விஜயகுமார், தேவராஜ், புஷ்பராஜ், கார்த்திக் உள்ளிட்ட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் கொள்ளையர்கள், அப்துல் ஜமாலின் வீட்டில் கொள்ளை அடித்துச் சென்ற சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து சரணடைந்த 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.