தமிழில் மருத்துவ படிப்பிற்கான பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் இதுவரை 7 பாடப்புத்தகங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், “முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான 7 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும், 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக நீரிழிவு நோய் தினம் 2022-ஐ முன்னிட்டு நீரிழிவு நோயாளிகளுக்கு குளுக்கோமீட்டர் கருவிகளை வழங்கினார். நீரிழிவு நோய் விழிப்புணர்வு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மருத்துவ மற்றும் செவிலியர் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பின்னர் அவர் கூறுகையில், “இந்தியாவில் நீரிழிவு நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் 10-12 சதவீதமாகவும், தமிழகத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது. தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினால் நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இன்று வரை கண்டறியப்பட்டவர்கள் 26,40,727 பேர். நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் பாதிப்புள்ளவர்கள் 19,26,136 பேர். ஆக மொத்தம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறிப்பட்டவர்கள் 45,66,863 பேர். தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 72 சதவீதம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஓராண்டுகளாக முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களின் பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி செய்து முடிப்பதற்காக 3 மருத்துவர்களுக்கு அயற்பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காயவியல் மருத்துவ தொழில்நுட்பவியல், குழந்தைகள் நல மருத்துவம், மயக்கியல், குழந்தைப் பருவ ரத்த நோய்கள் மற்றும் புற்றுநோய்கள், இயன்முறை மருத்துவம் மற்றும் நோய் தீர்க்கும் உணவு மருத்துவம் ஆகிய 7 புத்தகங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் 7 புத்தகங்கள் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.