தாய் மற்றும் தந்தையை அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிக் கொலை செய்துவிட்டு சடலத்துடன் இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், தில்லையம்பூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (82). இவரது மனைவி பாப்பா (எ) லட்சுமி (73). இவர்களுக்கு ராஜேந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் என்ற இரண்டு மகன்களும், கீதா என்ற ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் ராஜேந்திரன் (52) இளம் வயதிலேயே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருமணம் செய்யாமல் இருந்துள்ளார். 2-வது மகன் ரவிச்சந்திரன், மின்சாரத்துறையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மேனகா மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் விபத்தில் உயிரிழந்தார். மகள் கீதாவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவரும் இறந்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்டுள்ள ராஜேந்திரனுக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி முதல் கோவிந்தராஜ், அவரது மனைவி லட்சுமி ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. தகவலறிந்த பட்டீஸ்வரம் போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பெற்றோர் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ராஜேந்திரன் தனது தாய் மற்றும் தந்தையை அரிவாளால் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டி கொலை செய்ததும், இருவரது சடலத்துடன் இரண்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து சாப்பிட்டு வழக்கமான செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.