மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது பாதுகாவலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அவற்றை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் தமிழ்நாட்டின் பெரும்பாலான கடைகளில் இன்று வரை பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. ஆங்காங்கே அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டாலும், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு என்பது தடுக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளார். இதற்கிடையே, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தார். தற்போது, இந்த வீடியோவை பலரும் அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர். அதில், மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கி வியாபாரிகளுடன் பேசினார். அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுடனும் சிறிது நேரம் உரையாடிய நிர்மலா சீதாராமன், பாகற்காய், கருணை கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிச் சென்றார்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமன் அருகில் இருக்கும் அவரது பாதுகாவலர் கையில் பாலிதீன் பையில் காய்கறிகள் உள்ளன. இதனை வட்டமிட்டு காட்டியுள்ள பியூஷ், ‘சென்னையில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறோம். இதற்கான அபராதத்தை அவரே செலுத்தினால் பாராட்டப்பட வேண்டியதாகும். இனி நிர்மலா சீதாராமன் துணி பையை எடுத்துச் செல்லுங்கள்’. என்று குறிப்பிட்டு உள்ளார்.