’குப்பை கொட்டாதீர்’ என நூதனமான அறிவிப்பு பலகை ஒன்றை கணியூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சாலையோரங்களில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும், இவர்கள் கொட்டும் குப்பைகளில், கோழிவுக்கழிவுகள், உணவு பொருட்கள் கிடப்பதால் அதனை உண்பதற்காக நாய்கள் தொல்லையும் அதிகரித்து காணப்பட்டது. சாலையில் செல்வோர் மீது குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பேப்பர் பறந்து விழுந்து சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், மக்கள் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க முடிவு செய்த கணியூர் ஊராட்சி நிர்வாகம், அந்த பகுதியில் குப்பை கொட்டாதீர் என நூதனமான அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர். இந்த அறிவிப்பு பலகையானது நகைச்சுவை நடிகர் வடிவேலு வின்னர் படத்தில் பேசிய ஒரு பிரபலமான வசனத்தை போன்று உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், ”இந்த இடத்துக்கு குப்பை கொட்ட நீயும் வரக்கூடாது..! நானும் வரமாட்டேன்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் குப்பையை சேகரித்து செல்கின்றனர்.