90’s கிட் என்பதால், பெண் கிடைக்காத விரக்தியில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற இளைஞர் மற்றும் அவரது தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொதுவாகவே 90’s கிட்ஸ்களுக்கு திருமணமே ஆவதில்லை என்ற ஒரு கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல பலருக்கும் திருமணமாகிவிட்டது. வெகு ஒரு சிலருக்கே திருமணம் ஆகவில்லை. ஆனால் 90’ஸ் கிட்ஸ் என்றாலே திருமணம் ஆகாது என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படுவதைப் பார்த்து, இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது தாயிடம் கூற, அவரும் இதில் உண்மை இருக்கிறது போல நினைத்து, அதனால் ஒரு மொக்கை ப்ளான் போட்டு போலீஸிடம் சிக்கியிருக்கிறார்கள்.
சேலம் மாவட்டம் சரக்குப்பிள்ளையூர் நாகலூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் கணவரை இழந்த 47 வயதான லட்சுமி. இவரது மகன் ரமேஷ் குமார் (27) படித்து முடித்துவிட்டு தனக்கு கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து வந்துள்ளார். நிரந்தர வேலை வருமானம் எதுவும் இல்லாத நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என லட்சுமி பல இடங்களில் பெண் பார்த்துள்ளார். ஆனால், எங்கு முயன்றும் ரமேஷ் குமாருக்கு திருமணம் கைகூடாமல் போயிருக்கிறது. இதற்கு வேறு பெயர் காரணங்கள் இருக்க 90’ஸ் கிட்ஸ் என்பதால் தனக்கு திருமணம் நடக்கவில்லை என முகநூலிலும் புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில்தான் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ரமேஷ் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேறு எங்கும் பெண் கிடைக்காததால் வேறு வழியின்றி அந்த 17 வயது சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என லட்சுமி முடிவு செய்துள்ளார். எப்படியும் தனது மகனுக்கு பெண் கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்பதால் சிறுமியை கடத்தி திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார் லட்சுமி. பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது 22ஆம் தேதி சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார். வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து அவரை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளேயே மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் திட்டம் அரங்கேறியிருக்கிறது.
இந்நிலையில், தனது மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது லட்சுமி மற்றும் ரமேஷ் குமாரின் நடத்தையில் சந்தேகம் எழுந்திருக்கிறது. இதையடுத்து,அவர்களிடம் விசாரித்த போது வீட்டுக்குள்ளேயே சிறுமியை அடைத்து வைத்து திருமணம் செய்ய திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமி மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மகனுக்காக திருமணம் செய்து வைக்க சிறுமியை கடத்திய தாயையும், மகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.