லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்துள்ள ரஜினி, அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினி இப்படி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் தொடங்கியது. பின்னர் மும்பையில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த மே 8ஆம் தேதி லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. “மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம்” என்ற கேப்ஷனில் வெளியான நிலையில், இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் 2ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு ரஜினி திருவண்ணாமலை சென்றுள்ளார். கடந்த சில தினங்களாகவே அவரைக் காண ரசிகர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இப்படியான நிலையில் ரஜினிகாந்த், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான அண்ணாமலையார் – உண்ணாமலை அம்மன் கோயிலில் வழிபாடு செய்துள்ளார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.