கன்னியாகுமரி மாவட்டம் செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாபு (57). இவர் நிலத்தரகராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நாகர்கோவிலில் அமைந்துள்ள பத்திரப் பதிவுத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் சேவியர் பாபு தனது நண்பர் மோகன் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, சொமேட்டோ நிறுவன உடை அணிந்து வந்த நபர் ஒருவருக்கும் இவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே வரும்போது இருசக்கர வாகனங்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது சொமேட்டா நிறுவன உடையணிந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மோகன் மற்றும் சேவியர் பாபு ஆகிய இருவரையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால், பதறியடித்துக் கொண்டு இருவரும் சாலையில் ஓடியுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சேவியர் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டார் போலீஸார் சேவியர் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மோகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மோகன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் குறித்து கோட்டார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.