19 பெண்களை ஏமாற்றி சுமார் 80 சவரன் வரை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த வல்லம்பட்டியைச் சேர்ந்த ஜான்சி ராணி என்ற பெண் தனது கணவர் இறந்துவிட்டதைத் தொடர்ந்து மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அப்போது, ஜான்சி ராணியுடன் அறிமுகமானவர் பரமக்குடியைச் சேர்ந்த கார்த்திக் ராஜா. இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. கார்த்திக் ராஜாவும், ஜான்சி ராணியும் சில நாட்கள் செல்போனில் பேசியுள்ளனர். பிறகு, தனக்கு பணத்தேவை உள்ளது… ஆனால், தன்னிடம் தாயாரின் தாலிச் செயின் தான் உள்ளது… அதனை அடகு வைக்க முடியாது என்று கூறி ஜான்சி ராணியிடம் தாலியை கொடுத்துவிட்டு அவரிடம் இருந்த நகையை வாங்கிவிட்டு மாயமாகியுள்ளார்.
ஆனால், கார்த்திக்ராஜா கொடுத்தது போலி நகை என்பது பின்னர் தான் தெரியவந்தது. உடனடியாக கார்த்திக் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல் போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக் ராஜாவிற்கு ஏற்கனவே திருமணமாக விவாகரத்தானது தெரியவந்தது. மேலும், விவாரத்தான தனது மனைவி மற்றும் குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக ஜான்சி ராணி போன்று மொத்தம் 19 பெண்களை ஏமாற்றி சுமார் 80 சவரன் வரை மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.