தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கூறிய மனைவியை கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அற்புதராஜ் (வயது 20). இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த லதா என்பவரது மகள் சக்தி (18) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது ஊர் சுற்றி வந்துள்ளனர். இதனால், இளம்பெண் சக்தி கர்ப்பமானார். இதையடுத்து, இந்த விவகாரம் வீட்டில் தெரியவந்ததை அடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். 7 மாத கர்ப்பிணியான சக்தி, தனது தாய் லதா வீட்டில் தங்கியிருந்தார். இதற்கிடையே, தனக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என கணவர் அற்புதராஜிடம் மனைவி சக்தி கூறியுள்ளார்.
![7 மாத கர்ப்பிணியான மனைவியை அடித்தே கொன்ற கணவன்..! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/indian-baby-shower-valaikappu-ceremony-19-1024x611.jpg)
இதற்கு அற்புதராஜ், ஏற்கனவே கடன் அதிகமாக உள்ளது என்றும், தற்போதுள்ள நிலைமையில் வளைகாப்பு நடத்த முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த கணவர் அற்புதராஜ், மனைவி சக்தியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சக்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கணவன் அற்புதராஜை கைது செய்து அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.