மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான தலைமை உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனை செய்து நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அடுத்த காமராஜர் சாலையில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் ஓட்டலில் வணிக வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்குச் சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அம்மன் என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
சமீப காலங்களாக துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பிக் காணப்படும். இந்நிலையில், நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்களிடம் இருந்து வணிகவரித்துறைக்குப் புகார் வந்துள்ளது. இதனையடுத்து அம்மன் உணவகங்களுக்குத் தலைமையிடமாக இருக்கக் கூடிய தெப்பக்குளம் பகுதியில் அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில், ஜிஎஸ்டி இல்லாமல் உணவுப் பொருட்களுக்குக் கட்டணம் வசூலித்தது மற்றும் முறையாக ஜிஎஸ்டி இல்லாமல் பொருட்கள் கொள்முதல் செய்தது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக 15 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் வணிகவரித்துறையினர் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.