மதுரையில் காவல் ஆய்வாளர் மீது, ரவுடி குண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் பிரபல ரவுடியான கூல்மணி (எ) மணிகண்டன் (30) மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் அப்பகுதியில் பெரும் ரவுடி போல் வலம் வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியாற்றிய அழகுமுத்து என்பவர் கூல்மணி மீது கொள்ளை வழக்கு ஒன்றை பதிவு செய்தார். அதன்பிறகு அழகுமுத்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். எனினும், அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவர் சக காவலர்களுடன் மாடக்குளம் பகுதியில் வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கார் ஒன்றை மடக்கியபோது, உள்ளே ரவுடி கூல்மணி இருப்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது, திடீரென கூல்மணி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகுமுத்துவை வெட்ட முயன்றார். இதனை சுதாகரித்துக் கொண்டு விலகியதால், அழகுமுத்து காயம் இன்றி தப்பினர். பின்னர், காரிலிருந்து இறங்கி அங்கிருந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக கூல்மணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கூல்மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.