தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக சொல்லி ஐந்தாம் வகுப்பு மாணவியை தன் அறைக்குள் அழைத்து கதவை சாத்திக்கொண்டு பாலியல் சில்மிஷம் செய்த தனியார் பள்ளியின் தாளாளருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் ராயக்கோட்டை சாலையில் இயங்கி வருகிறது சாந்தி நிகேதன் மெட்ரிக் தனியார் பள்ளி. இந்த பள்ளியின் தாளாளராக இருந்தவர் குருதத்(64). கடந்த 2019 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 24ஆம் தேதி அன்று சாந்தி நிகேதன் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடந்து இருக்கிறது. அப்போது அந்த சிறப்பு வகுப்பில் ஐந்தாம் வகுப்பு படித்த 10 வயது சிறுமி கலந்து கொண்டிருக்கிறார்.
சிறுமியிடம் தமிழ் எழுத்து பயிற்சி கொடுப்பதாக சொல்லி பள்ளியின் தாளாளர் குருதத் தனியாக தன் அறைக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அந்த அறை கதவை சாத்திக்கொண்டு அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
வீடு திரும்பிய சிறுமி, பெற்றோரிடம் அழுதபடியே பள்ளியில் நடந்ததை சொல்லி இருக்கிறார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இதை அடுத்து பள்ளி தாளாளர் குருதத் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது விசாரணைகள் முடிவடைந்து நீதிபதி பி . சுதா தீர்ப்பு அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட குருதத் சிறுமியை அறைக்குள் வைத்துப் பூட்டியதற்காக ஒரு வருடமும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக ஏழு ஆண்டுகளும் மொத்தம் எட்டு ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.