‘வேட்டையாடு விளையாடு’ சினிமா பாணியில் சென்னை மென்பொறியாளர் ஒருவர் தனது முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி ஹீலியம் வாயுவை சுவாசித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி தம்பதியரின் மகள் இந்து. இவர், கோவையில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், நல்லகண்டன் பாளையத்தை சேர்ந்த மென்பொறியாளர் விணுபாரதிக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் இந்து, தனது கணவர் விணுபாரதியுடன் சென்னையில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவன பணியை தொடர்ந்தார். இந்த நிலையில், தோட்டக்காட்டூரில் வசித்து வந்த பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரை பார்ப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இந்து சென்னையில் இருந்து அங்கு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று மதிய உணவுக்கு பின்னர் தனது அறைக்கு சென்ற இந்து, நீண்ட நேரமாக அறை கதவை திறக்கவில்லை. இதனால் பயந்துபோன உறவினர்கள் இரவு அவரது அறையை திறந்து பார்த்த போது இந்து விபரீதமான முறையில் சடலமாக கிடந்தார். முகம் முழுவதும் பிளாஸ்டிக் கவரை சுற்றி டேப்பால் ஒட்டப்பட்டும், அந்த பிளாஸ்டிக் கவருக்குள் ஹீலியம் கியாஸ் டியூப்பை செருகப்பட்ட நிலையில், இந்து சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியான உறவினர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீசார் இந்துவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அவர் தற்கொலை செய்து கொள்வது குறித்து இணையத்தில் தேடிஉள்ளார். ’வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஜோதிகா பிளாஸ்டிக் கவரை சுற்றி தற்கொலைக்கு முயல்வது போல முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு ஹீலியம் வாயுவை சுவாசித்தால் உயிரிழந்து விடலாம் என்ற தற்கொலை திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, ஆன்லைன் மூலம் ஹீலியம் வாயு சிலிண்டரை வாங்கி வந்து, தனிஅறையில் அமர்ந்து இந்த விபரீத முடிவை மேற்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆவதால் தற்கொலைக்காண காரணம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.