திட்டக்குடி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண் காணாமல் போன நிலையில், அவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி காமுட்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராசு என்பவரின் மகள் மஞ்சு (21). இவர் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவருக்கும், ஆவட்டி கிராமத்தைச் சேர்ந்த (24) வயது இளைஞர் ஒருவருக்கும், கடந்த 10ஆம் தேதியன்று திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை ரேஷன் கடைக்கு சென்ற மஞ்சு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மஞ்சுவின் தாயார் சுமதி அளித்த புகாரின் பேரில், ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்

இதையடுத்து, போலீசாரின் விசாரணையில் அதிருப்தியடைந்த பெண்ணின் உறவினர்கள், நேற்றிரவு ஆவினங்குடி பஸ்நிறுத்தம் அருகே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஆவினங்குடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து காணாமல் போன பெண்ணை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரைமணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின், போலீசாரின் சமாதானத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டு போலீஸ் நிலையத்திற்குச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.