தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை, லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின்றன.
ஊடகத்துறையில் ஆர்வம் கொண்ட இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத்துள்ளது. ஊடகவியலுக்குத் தேவையான கோட்பாடுகளையும் களப்பயிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளது.
வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. பொருளாதாரம் நிதி, அறிவியல், தொழில் நுட்பம், அரசியல், பண்பாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப்பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற்கேற்ப தேர்தெடுத்துக்கொள்ளலாம். எழுத்து, ஒளிப்படம் , வீடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், கைப்பேசி, ட்ரோன் இதழியல்உ ளபட பல்வேறு ஊடகப்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பட்டப்படிப்பு தேறிய 20 முதல் 25 வயது கொண்டவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். வாரத்தில் 5 நாட்கள்( திங்கள் முதல் வெள்ளி வரை ) சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகள் நடத்தப்படுகின்றது. கட்டணமில்லா படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். மேலும் தகவல்களை https://www.loyalacollege.edu/CAJ/home என்ற இணையதளத்திலும், இதற்கு விண்ணப்பிக்க shorturl.at/nsU25 என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.