உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், வாகனங்கள் கட்டணம் இன்றி செல்கிறது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் டேக் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், சுங்கச்சாவடி ஒப்பந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றி வந்த 28 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி, பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், வசூல் மையங்களை பூட்டிவிட்டு அலுவலகம் எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், உடன்பாடு எட்டாததால் தொடர்ந்து 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக கடந்த 3 நாட்களாக கட்டணம் செலுத்தாமல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றனர். தங்களை மீண்டும் பணி அமர்த்தப்படும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுமென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.