கடையம் அருகே திருமணமான 5 நாட்களில் புதுமணப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே துப்பாக்குடி ஊருக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு ஓடையில் நேற்றிரவு இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அந்த பெண் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகள் இசக்கி செல்வி (23) என்பது தெரியவந்தது. இசக்கி செல்விக்கு கடந்த 31ஆம் தேதி துப்பாக்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. மறுநாள் (செப்.1) காலை அவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், அன்று அதிகாலை இசக்கி செல்வி திடீரென மாயமாகி விட்டார். அவரை பெற்றோர் தேடி வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வேறு ஒரு வாலிபரை அவர் திருமணம் செய்து கொண்டார். இதற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், இசக்கி செல்வி தனது கணவருடன் கடையம் அருகே கோவிலூத்து பகுதியில் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தான் அவர் மறுநாள் ஓடையில் கொலை செய்யப்பட்ட நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். மேலும், நேற்று மாலை இசக்கி செல்வியை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இசக்கி செல்வியின் கணவர் மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.