கரூரில் வீட்டிற்கு முன்பு மது அருந்த வேண்டாம் என்று கூறிய சமையல் மாஸ்டரை இளைஞர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மக்கள் பாதை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரது மகன் சரவணன் (35). இவர் சமையல் தொழிலாளி. இவர் நேற்றிரவு தனது தாயுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, இவரது வீட்டின் முன்பு சில இளைஞர்கள் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த சரவணன், அவர்களை தட்டி கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அந்த இளைஞர்கள் சரவணின் வீட்டிற்குள் இருந்தே கத்தியை எடுத்து வந்து, சரவணை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கரூர் போலீசார், கொலை செய்யப்பட்ட சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் ரவுடியான தமிழரசன் மற்றும் சஞ்சய் என்பது தெரியவந்தது. இதையடுத்து,வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மது அருந்தியதை தட்டி கேட்ட சமையல் மாஸ்டர் கொலை செய்யப்பட்ட கூறப்படும் சம்பவம் கரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.