திருடிய பணத்தில் புதிய பல்சர் பைக் வாங்கியதை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்ததால், அண்ணன், தம்பி இருவரும் கையும் களவுமாக சிக்கினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பொந்துகம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பழ வியாபாரி முனுசாமி. இவர் காலையில் தொழிலுக்கு சென்றுவிட்டால், வீடு திரும்ப மாலை ஆகிவிடும். இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூர் சென்ற முனுசாமி, வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.90 ஆயிரம் ரொக்கம் காணாமல்போயுள்ளது. இச்சம்பம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசாரும் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் 19 வயது வெள்ளைச்சாமி என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக முனுசாமி கூறியுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரின் தந்தையிடம் விசாரித்தபோது, நாங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக கூறினார். ஆனால், அவரது இளைய மகன் வெள்ளைச்சாமி புதிய இருசக்கர வாகனம் வாங்கியதை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

அதனடிப்படையில், வெள்ளைச்சாமியை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், வெள்ளைச்சாமி, அவரது அண்ணன் சேது மற்றும் அவரது நண்பர் கேசவன் ஆகியோர் சேர்ந்து பணத்தைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். திருடிய பணத்தில் 5,000 ரூபாயை இருசக்கர வாகனத்திற்கு முன்பணமாகக் கட்டி புதிய பல்சர் பைக்கை வாங்கியுள்ளார் வெள்ளைச்சாமி. அதனை அப்படியே கெத்தாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டதும் மாட்டிக் கொண்டார். தற்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்த மீதிப்பணத்தைக் கைப்பற்றி, அவர்களை சிறையில் அடைத்தனர்.