ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற FIDE மகளிர் உலகக் கோப்பையில் 19 வயதான திவ்யா தேஷ்முக், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இறுதிப் போட்டியில், அனுபவமிக்க சக இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பியை டைபிரேக் ஆட்டங்களில் 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தி திவ்யா வரலாற்றுச் சாதனை படைத்தார். மகளிர் உலக கோப்பை செஸ் போட்டியில் இந்தியா வென்றது இதுவே முதல் முறை.
அதே சமயம் உலகக் கோப்பை தொடரின் வரலாற்றில் இரு இந்தியர்கள் இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் மோதுயதும் இதுவே முதன்முறை. முதலில் நடைபெற்ற இரண்டு கிளாசிக்கல் ஆட்டங்கள் டிராவாக முடிந்தன. இதில், ஒவ்வொருவருக்கும் அதிக நேரம் (அதாவது சுமார் 90 நிமிடங்கள் + 30 வினாடி இன்பிரிமென்ட்) வழங்கப்பட்டு ஆடப்படுகிறது. இவை சமநிலையில் முடிந்ததால், இறுதிப் போட்டியின் முடிவைத் தீர்மானிக்க டைபிரேக் (Tie-break) சுற்றுக்கு செல்ல வேண்டிய நிலை உருவானது.
டைபிரேக்கில், ரேபிட் ஆட்டங்கள் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு வீரருக்கும் 10 நிமிடங்கள் நேரம் வழங்கப்பட்டு, ஒவ்வொரு நகர்வுக்குப் பிறகும் 10 வினாடிகள் அதிகரிக்கப்படும். இவ்வாறு இரண்டு ரேபிட் ஆட்டங்கள் நடைபெற்றன. இரண்டிலும் நேரக் கட்டுப்பாட்டைக் சிறப்பாக கையாள்ந்த திவ்யா, ஹம்பியை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.
தற்போது திவ்யா FIDE தரவரிசையில் 18வது இடத்தில் உள்ளார், இந்தியாவில் நான்காவது இடத்தில் திகழ்கிறார். அனுபவம் மிக்க ஹம்பி உலக ரேபிட் தரவரிசையில் 10வது இடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே நடத்திய இறுதி ஆட்டங்கள், இந்திய சதுரங்கத்தின் எதிர்காலத்தைக் குறிக்கும் மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.