அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழகப் பொது சுகாதாரத் துறை முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் அவசர சிகிச்சைகளுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அவசர மருத்துவப் பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகப் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி, இன்று (அக். 19) மற்றும் தீபாவளி நாளான (அக். 20) ஆகிய இரண்டு தினங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மாவட்ட மற்றும் நகர எல்லைகளுக்குட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், முதன்மை சுகாதார மையங்கள், துணை சுகாதார மையங்கள் என அனைத்திலும் அவசர சிகிச்சை பிரிவுகள் முழு வீச்சில் செயல்பட வேண்டும்.
பட்டாசு வெடிப்பதாலோ அல்லது வேறு காரணங்களாலோ ஏற்படும் தீக்காயங்கள், கண் காயங்கள், சாலை விபத்துகள், உணவு ஒவ்வாமை போன்ற எந்தவித அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும், அதற்கான முதல் நிலை மருத்துவச் சேவைகளை உடனடியாக வழங்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர சிகிச்சைக்காக தேவையான மருந்துகள், முதலுதவி பொருட்கள், ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் ரத்த வங்கிகள் ஆகியவை முழுமையாகத் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்த மாவட்டத்தில் பெரிய அளவிலான விபத்துகளோ அல்லது அசம்பாவிதங்களோ ஏற்பட்டால், அது குறித்த தகவல்களை உடனடியாக மாநிலப் பொது சுகாதாரத்துறைக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சுகாதார இயக்குநர்கள் இந்த அவசரச் சூழலை நேரடியாகக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவ வசதிகளைத் தயார் நிலையில் வைத்திருந்தாலும், பொதுமக்கள் தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.



