இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் நிலக்கரி, விறகு மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தியே அன்றாடம் சமையல் செய்து வந்தனர். இந்த பொருட்களை கொண்டு சமைக்கும் போது அதிகப்படியான காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, பெண்களும் சுவாசம் சம்பந்தமான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டிய சூழல் நிலவியது.
இதை கருத்தில் கொண்டே இந்திய அரசாங்கம் நாட்டில் உள்ள ஏழை மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு எல்.பி.ஜி எனப்படும் சமையல் எரிவாயு அடுப்புகளை இலவசமாக வழங்க வேண்டும் என்பதற்காக பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களின் நன்மைக்காகவும், சுற்றுப்புறத்தை பாதுகாப்பதற்காகவும் கடந்த மே 01, 2016 அன்று அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்’.
இந்த திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு இலவசமாக LPG சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டத்தின் கீழ் முதல் 12 முறை கேஸ் சிலிண்டரை ரூ.300 கொடுத்து நிரப்பிக் கொள்ளலாம். அந்த தொகை மீண்டும் பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே மானியமாக ஒவ்வொரு முறையும் நேரடியாக வரவு வைக்கப்படும்.
உத்தரபிரதேசம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னணி மாநிலமாக உள்ளது, இந்நிலையில் மாநிலம் முழுவதும் 1.86 கோடி பெண்களுக்கு பண்டிகை நிவாரணம் அளிக்கும் வகையில், பிரதமர் உஜ்வாலா யோஜனா (PM-Ujjwala) திட்டத்தின் கீழ் இரண்டு இலவச LPG எரிவாயு நிரப்பு பெட்டிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை லோக் பவனில் பரிசளிக்க உள்ளார்.
இதற்காக பெண்கள் எந்தவிதமான விண்ணப்பமும் செய்யத் தேவையில்லை. வழக்கம்போல் சிலிண்டர் ஏஜென்சியிடம் இருந்து சிலிண்டரை பெற்றுக்கொண்டால், அதற்கான தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும். இந்த இலவச சிலிண்டர் சலுகை, கேஒய்சி (KYC) சரிபார்ப்பு முடித்த பயனாளிகளுக்கே பொருந்தும். இன்னும் கேஒய்சி புதுப்பிக்காத பெண்களுக்கு இந்த மாதம் இலவச சிலிண்டர் கிடையாது. எனவே, நீங்கள் இன்னும் அந்த அப்டேட்டை செய்யவில்லை என்றால் உஜ்வாலா யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் அப்டேட் செய்யலாம்.
Read more: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உயர் ஆலோசகர் ஆஷ்லே டெல்லிஸ் அமெரிக்காவில் கைது; யார் இவர்?