தீபாவளி பண்டிகை வரும் அக்.20, 21ஆம் தேதிகளில் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க தயாராகி வருகின்றனர். பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதும் இந்தச் சூழலில், பயணிகள் தங்கள் பயணத்தின்போது சில ரயில்வே விதிகளை தவறாமல் தெரிந்து கொள்வது அவசியம்.
குறிப்பாக, தீபாவளியின் உச்சக்கட்ட கொண்டாட்டமாக கருதப்படும் பட்டாசு வெடிப்பது தொடர்பான பொருட்களுடன் ரயிலில் பயணிக்கும்போது ஏற்படும் சிக்கல்கள் குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயிலில் பட்டாசு ஏன் தடை செய்யப்படுகிறது..?
தீபாவளிக்கு இனிப்புகள், பலகாரங்கள், புத்தாடைகள் போன்றவற்றை பயணிகள் தாராளமாக எடுத்துச் செல்லலாம். ஆனால், ரயில்வே விதிகளின்படி, பட்டாசுகள், வெடிகள், ராக்கெட் போன்ற எளிதில் தீப்பிடிக்கக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய எந்தவொரு பொருளையும் ரயிலில் கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பட்டாசுகளை ரயிலில் கொண்டு செல்வது விதிகளை மீறுவது மட்டுமல்லாமல், அதே ரயிலில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான சக பயணிகளின் உயிருக்கும் நேரடியாக ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். ஒரு சிறு தீப்பொறி அல்லது தவறு ஏற்பட்டாலும் மொத்த ரயிலும் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால், இந்தத் தடை தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது.
மீறினால் என்ன தண்டனை..?
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி காலகட்டத்தில் ரயில்வே பாதுகாப்புத் துறை (RPF) பயணிகளைத் தீவிரமாகச் சோதனை செய்து கண்காணிப்பில் ஈடுபடுகிறது. இந்திய ரயில்வே சட்டத்தின் பிரிவு 164-ன் கீழ், பயணத்தின்போது தடை செய்யப்பட்ட எந்தவொரு பொருளையும் எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விதிமுறையை மீறும் பயணிகளுக்கு ₹1,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம். எனவே, பயணிகள் ஆபத்தான இத்தகைய பொருட்களைத் தவிர்த்து, பாதுகாப்பான ரயில் பயணத்தை மேற்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Read More : “சினிமாவுல வந்த பணம் அரசியல்ல வரல”..!! மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார் நடிகர் சுரேஷ் கோபி..!!