பண்டிகை காலம் வந்தாலே செலவுகளும் அதிகரிக்கும். இந்தச் சூழலில், பலர் கடன்களை நாடி செல்கின்றனர். ஆனால், எந்த கடன் மலிவானது, எது அதிக சுமையை கொடுக்கும் என்பதை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தகவலின்படி, மக்கள் தற்போது பாதுகாப்பான கடன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
அதற்கு தங்க அடமானக் கடன், மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் ஆகியவை சிறந்த உதாரணங்கள். அதேசமயம், தனிநபர் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் போன்ற பாதுகாப்பற்ற கடன்கள் அதிக வட்டி விகிதங்களை கொண்டுள்ளன.
தங்க அடமானக் கடன்: இது தனிநபர் கடனைவிடக் குறைந்த வட்டியைக் கொண்டது (8.2%-18%). உடனடி பணத் தேவைக்கு ஏற்றது. ஆவணங்கள் குறைவாக இருப்பதால், விரைவாகப் பணம் கிடைக்கும். ஆனால், தங்கத்தின் விலை குறைந்தால் கூடுதல் தங்கத்தை அடமானம் வைக்க வேண்டி வரலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் அடமான கடன்: மியூச்சுவல் ஃபண்டுகளை விற்காமல், அதை அடமானம் வைத்து கடன் பெறுவது இப்போது அதிகரித்து வருகிறது. இதன் வட்டி விகிதம் தனிநபர் கடனைவிட குறைவு (8%-15%). முதலீட்டை தொடர முடியும் என்பது இதன் பெரிய நன்மை. ஆனால், சந்தை சரிந்தால் கூடுதல் அடமானம் வைக்க வேண்டியிருக்கும்.
கிரெடிட் கார்டு கடன்: இது மிகவும் எளிதானது. ஆனால், வட்டி விகிதம் மிக அதிகம் (40%-50%). கவனமின்றிப் பயன்படுத்தினால், பெரும் நிதிச் சிக்கலில் சிக்கிக்கொள்ள நேரிடும். பில் தொகையை முழுமையாகக் கட்டுவது மட்டுமே பாதுகாப்பானது.
தனிநபர் கடன்: பிணையம் வைக்கத் தேவையில்லை என்பது இதன் சிறப்பு. ஆனால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் (11%-24%). தவணைத் தொகை தவறினால், கிரெடிட் ஸ்கோர் பாதிக்கும்.
நிபுணர்களின் பரிந்துரை : நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, குறுகிய காலத் தேவைகளுக்கு உடனடியாகப் பணம் தேவைப்பட்டால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாம். ஆனால், பெரிய தொகைகளுக்கு, தங்கம் அல்லது மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன்கள் மிகவும் மலிவானவை. பிணையம் எதுவும் வைக்க விரும்பவில்லை என்றால், தனிநபர் கடன் ஒரு மாற்று வழி என்று தெரிவித்துள்ளனர்.
Read More : தீபாவளி போனஸ் + பழைய ஓய்வூதியத் திட்டம்..!! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் அறிவிப்பு..!!



