தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக கைத்தறி நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, தரமான துணிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் வைரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், மாவட்ட உதவி ஆட்சியர் கார்த்திக் ராஜா இந்த சிறப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்தாண்டு தீபாவளி விற்பனைக்காக, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக 30% அரசுத் தள்ளுபடியை வழங்குகிறது.
கோவை மென்பட்டு, ஆரணி, சேலம், திருபுவனம் பட்டுப்புடவைகள், கோரா காட்டன், லினன் மற்றும் பருத்திச் சேலைகள் போன்ற பட்டு மற்றும் கைத்தறி ரகங்கள் ஏராளமாக விற்பனைக்கு குவிந்துள்ளன. புடவைகள் மட்டுமின்றி, போர்வைகள், படுக்கை விரிப்புகள், வேஷ்டிகள், லுங்கிகள், சட்டைகள் போன்ற பலவிதமான துணி வகைகளும் விற்பனைக்கு கிடைக்கின்றன.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது ரூ.1 கோடியே 60 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள துணிகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.2 கோடியே 30 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பலன் அளிக்கும் விதமாக, கோ-ஆப்டெக்ஸ் தனது மாதாந்திர சேமிப்புத் திட்டத்தையும் வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் 11 மாத தவணையை செலுத்தி, 12-வது மாதத் தவணையை கோ-ஆப்டெக்ஸ் மூலம் பெற்று, மொத்தமாக 30% தள்ளுபடியுடன் துணிகளை வாங்கி கொள்ளலாம். நேரடி விற்பனை மட்டுமின்றி, www.cooptex.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read More : 3ஆம் உலகப் போர் முதல் AI தொழில்நுட்பம் வரை..!! 2026இல் நடக்கப் போகும் மிக மோசமான சம்பவங்கள்..!!