தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஒரு பக்கம் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் பிஸியாக இருக்க, மறுபுறம் தேமுதிக தனது வேட்பாளர் தேர்வுக்கான ‘விருப்ப மனு’ விநியோகத்தை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் தொடங்கி நடத்தி வருகிறது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பக் கட்டணமாகப் பொதுத் தொகுதிகளுக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிகளுக்கு 10,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப்ரவரி 12-ம் தேதியான இன்றைய தினமே இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கும் தொண்டர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் இல்லை என கூறப்படுகிறது.
இதற்கு தேமுதிக தரப்பில் ஒரு சுவாரசியமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அஷ்டமி மற்றும் நவமி போன்ற திதி நாட்கள் வந்ததால், ஆன்மீக ரீதியாக சுப காரியங்களை தவிர்க்கும் நோக்கில் கட்சியினர் வராததே இந்தத் தொய்வுக்குக் காரணம் என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், கட்சியினரின் கோரிக்கையை ஏற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, விருப்ப மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் பிப்ரவரி 15-ம் தேதி மாலை 4 மணி வரை ஆர்வமுள்ள நிர்வாகிகள் தங்கள் மனுக்களைச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : ஆதார் அட்டை பயனர்களுக்கு குட்நியூஸ்..! சில நிமிடங்களில் முகவரி மாற்றலாம்.. புதிய செயலியில் இதை செய்யுங்க..!



