செங்கல்பட்டில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பாஜக அரசியல் நிலைப்பாடு மற்றும் விசிகவின் கூட்டணி நிலை குறித்து பேசினார். அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் பாஜகவுக்கு நேரடி எதிர்ப்புக் குரலாக இருப்பது விசிகதான். இங்குள்ள பிரச்சனை விசிகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலானது அல்ல. இதை சாதியப் பிரச்சனையாகத் திரிப்பதே அவர்களின் முக்கிய நோக்கம்.
விசிக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானது என்கிற தவறான பிம்பத்தை அவர்கள் பரப்புகின்றனர். இதன் உண்மையான அரசியல் நோக்கம், திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்துவதுதான்” என்று குற்றம் சாட்டினார். திமுக தலைமையிலான கூட்டணியை விட்டு விசிக வெளியேறினால், யாரும் நம்மைக் குறித்துப் பேசப் போவதில்லை . விசிக அப்போது அவர்களின் இலக்காக இருக்காது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
பாஜகவையும் ஆர்எஸ்எஸ்ஸையும் நான் தொடர்ந்து விமர்சிப்பது, சனாதன எதிர்ப்பைப் பிரதானப்படுத்துவது மற்றும் திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க நான் உறுதுணையாக இருப்பது இதுதான் அவர்களின் உண்மையான பிரச்சனை. நான் நாளைக்கே ‘திமுக கூட்டணி வேண்டாம்’ என்று ஒரு அறிக்கை வெளியிட்டால், அவர்கள் அதை ஒரு இன்னொரு தீபாவளி பண்டிகை போல மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால், எனவே, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைப் பாதுகாக்கும் இயக்கமாக விசிக செயல்படுகிறது” என்று அவர் கூறினார்.



