மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.. மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3,000 + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்… மேலும் திராவிட 2.0 ஆட்சியில் மகளிர் உரிமை தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. அதே போல் திமுக அமைச்சர்கள், மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் தோல்வி பயம் காரணமாகவே முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன..
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் மகளிருக்கு 5,000 மட்டுமில்லை 50,000 கொடுத்தாலும் திமுக தோல்வியடையப் போவது உறுதி.. தோல்வி பயத்தில் எத்தனை அறிவிப்புகளை வெளியிட்டாலும் தமிழக மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக 3 ஆயிரம் ரூபாயும், இதுவரை இல்லாத கோடைக் கால சிறப்புத் தொகுப்பு என 2 ஆயிரம் ரூபாயும் என மொத்தமாக வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சமூகநீதி எனும் தலைப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதியளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தகுதியான பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்த திமுக, தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக வாக்குறுதி அளித்திருப்பது ஒட்டுமொத்த மகளிரையும் ஏமாற்றும் வேலையாகும்.
தேர்தல் ஆணைய நடவடிக்கைகளைக் காரணம் காட்டி இதுபோன்ற அறிவிப்புகளை முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசரகதியில் வெளியிட்டிருப்பதன் பின்னணியில் இருப்பது திமுகவிற்கு ஏற்பட்டிற்கும் தேர்தல் தோல்வி பயம் தானே தவிர, மகளிர் மீதான உண்மையான அக்கறை இல்லை என்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே, தோல்வி பயத்தில் திமுக எடுக்கும் எந்த வித அஷ்திரமும் எடுபடாது என்பதோடு பணத்தைக் கொடுத்து தமிழக மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் திமுகவுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் இணைந்து படுதோல்வியைப் பரிசாக வழங்கப்போவது உறுதி.” என்று தெரிவித்துள்ளார்.
Read More : அதிமுகவை பார்த்து பயத்தில் தானே ரூ.5000 அறிவிப்பு.. 2 வருஷமா கோடைக் காலமே வரலயா? முதல்வரை சாடிய இபிஎஸ்..!



