2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் என இந்தியா டுடே நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் தான், இந்தியா டுடே ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும், அதில் 2026 சட்டமன்ற தேர்தல் களத்தில் திமுக முன்னணியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. தேர்தல் கூட்டணியில் வலுவான நிலையில் இருப்பது மட்டுமின்றி, இந்திய அரசியலில் தனக்கென ஒரு பாதுகாப்பு வளையத்தை முதல்வர் முக.ஸ்டாலின் உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நீட், இந்தி திணிப்பு, ஆளுநர் விவகாரம் போன்ற பிரச்சனைகளில் மத்திய அரசுக்கு வலுவான எதிர்ப்பை திமுக தொடர்ந்து தெரிவித்து வருகிறது. திமுகவை இன்னும் நடைமுறையில் உள்ள இயக்கமாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நிலைநிறுத்தி வருகிறார். அதேநேரம் அதிமுக-பாஜக கூட்டணி, திமுகவுக்கு கூடுதல் வலுசேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி திணிப்பு, தொகுதி மறுவரையறை போன்ற விவகாரங்களில் அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு பின், பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால், அதிமுகவின் வாக்குகள் சரிவடைய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வைல் கார்ட் என்ட்ரி போல் அரசியலில் குதித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அதிகளவில் இளைஞர்களை ஈர்த்தாலும், அது தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தவெக வாக்குகளைப் பிரிப்பதாலும், அதிமுக – பாஜக கூட்டணி, திமுகவை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு” என இந்தியா டுடே தெரிவித்துள்ளது.