தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, அதன் வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கிய பழைய நிர்வாகிகளுக்கும், தற்போதைய தலைமைக்கும் இடையிலான பனிப்போர் இப்போது பகிரங்கமாக வெடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் முற்றுகையிடப்பட்ட சம்பவம், தவெக-வின் உட்கட்சிப் பூசலை வீதிக்குக் கொண்டு வந்துள்ளது.
வெள்ளக்கோவிலில் நகர அலுவலக திறப்பு விழாவிற்கு வந்த செங்கோட்டையனை, விஜய் மக்கள் இயக்கத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக ரத்தம் சிந்தி உழைத்த நிர்வாகிகள் வழிமறித்து முற்றுகையிட்டனர். கட்சியின் அடிப்படை வளர்ச்சிக்கு உழைத்த எங்களைப் புறக்கணித்துவிட்டு, வெளியூர்க்காரர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் முக்கியப் பொறுப்புகளை வழங்குவதா? எனக் கொந்தளித்த அவர்கள், நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தவெக-வின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது ஏற்கனவே நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி புகைந்து வரும் நிலையில், இந்தப் புதிய சர்ச்சை அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பணம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையில் புதியவர்களுக்குப் பதவிகள் தாராளமாக வழங்கப்படுவதாகவும், பழைய ‘விஜய் மக்கள் இயக்க’ விசுவாசிகள் திட்டமிட்டே ஓரங்கட்டப்படுவதாகவும் கடந்த 2025-ஆம் ஆண்டிலிருந்தே புகார்கள் எழுந்து வருகின்றன.
கரூரில் நடந்த மோதல் மற்றும் கைது நடவடிக்கைகளின் போது, தலைமை நடந்து கொண்ட விதம் பழைய நிர்வாகிகளை காயப்படுத்திய நிலையில், இப்போது திருப்பூரில் வெடித்துள்ள இந்த முற்றுகைப் போராட்டம் தவெக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அடிமட்ட தொண்டர்களின் இந்தக் குமுறலைத் தலைவர் விஜய் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பாரா அல்லது இந்தப் பிளவு கட்சிக்குச் சரிவை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



