தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய், அரசியலுக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் அவரைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். அடுத்தடுத்து மாநாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சமீபத்தில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, சில நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட்டாலும், கட்சி மீதான மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
‘தி பிரிண்ட்’ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஆளும் திமுக அரசால், ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் (Survey), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டால், சுமார் 23% வாக்குகளைப் பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரூர் நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, அக்டோபர் 1 முதல் 9-ஆம் தேதி வரை, தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சம் பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், தவெக தமிழக அரசியலில் ஒரு வலிமையான போட்டியாளராக உருவெடுக்கும் என்று முடிவுகள் காட்டுகின்றன.
கூட்டணி அமைந்தால் என்ன ஆகும்..?
அதிமுக, பாஜக மற்றும் தவெக ஆகிய 3 கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தால், ஆளும் திமுக கூட்டணி 50% வாக்குகளைப் பெறும் என்றும், இந்தக் கூட்டணிக்கு 35% வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 12% வாக்குகளும் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் பாஜகவின் சித்தாந்த எதிர்ப்பு ஆகியவை இந்தக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக் கட்டுப்படுத்தலாம் என்றும் சர்வே குறிப்பிடுகிறது.
தவெக தனித்துப் போட்டியிட்டால் அரசியல் மாற்றம் :
விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் பட்சத்தில், அரசியல் களம் முற்றிலும் மாறும் என தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், திமுகவின் வாக்கு வங்கி 45% ஆகக் குறையும். அதிமுக-பாஜக கூட்டணி வெறும் 22% வாக்குகளை மட்டுமே பெறும். அதே சமயம், விஜய்யின் தவெக 23% வாக்குகளைப் பிரிக்கும். குறிப்பாக, சீமானின் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 5% ஆகக் குறையும் என்று இந்த ஆய்வு கணித்துள்ளது.
இந்த சர்வே திமுகவுக்குச் சாதகமான போக்கைக் காட்டினாலும், நீண்டகால அடிப்படையில், 2029 மற்றும் 2031 சட்டமன்றத் தேர்தல்களில் விஜய், திமுகவுக்கு ஒரு வலிமையான சவாலாக உருவெடுப்பார் என்பதைக் குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, விஜய்யின் தனிப்பட்ட புகழ், தற்போது அரசியல் ரீதியான வாக்கு வங்கியாக மாறிவருவது தெளிவாக தெரிவதாகவும், இது வரும் ஆண்டுகளில் தமிழக அரசியலின் போக்கை மாற்றியமைக்கும் என்றும் சர்வே முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
Read More : நல்லகண்ணுவுக்கு என்ன ஆச்சு..? மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!