விஜய் வாகனத்தை பின் தொடரக்கூடாது; மரம், மின்கம்பம் மீது ஏறக்கூடாது; தொண்டர்களுக்கு தவெக விதித்த கட்டுப்பாடுகள்..!

tvkvijay1 1755770819

நாளை புதுச்சேரியில் விஜய்யின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் தவெக தலைமை சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது..


தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையம் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் “ நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ‘புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி*நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நம் வெற்றித் தலைவர் அவர்கள், தன்னை நேசிக்கும் மக்களின் பாதுகாப்பில் எள்ளளவும் சமரசம் செய்துகொள்ளாதவர். எனவே நம் வெற்றித் தலைவர் அவர்களின் இந்தப் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள். முதியவர்கள், உடல்நலம் குன்றியோர். பள்ளிச் சிறுவர், சிறுமியர். மாற்றுத் திறனாளிகள் ஆகியோர். நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது. போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

எளிதில் அடையாளம் காணும் வகையில் கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாண்பமை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers) ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்..” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

    RUPA

    Next Post

    காலை நடை vs மாலை நடை: உடல் எடையை குறைக்க எந்த நேரத்தில் நடப்பது சிறந்தது..?

    Mon Dec 8 , 2025
    Morning walk vs evening walk: When is the best time to walk to lose weight?
    walk 2

    You May Like